

குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை திடீரென சிறிதுநேரம் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தது.
இந்த நிலையில் குடியாத்தம் அடுத்த சென்ராம்பள்ளி பகுதியில் பெரிய புளியமரம் ஒன்று விவசாயி ரவி என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இதனால் வீட்டின் மேற்கூரை சாய்ந்து வீட்டில் இருந்த ரவியின் மனைவி குமாரி (வயது 50), அவரது பேரன்கள் யோகித் (4) குபேந்திரன் (9) ஆகியோர் மீதும் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த குமாரி மற்றும் சிறுவர்களை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டின் மீது விழுந்த மரத்தை எந்திரங்கள் கொண்டு அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.