சூறாவளி காற்றுடன் மழை: பூந்தமல்லியில் தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு


சூறாவளி காற்றுடன் மழை: பூந்தமல்லியில் தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
x

பூந்தமல்லி பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்த நிலையில், தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டி அருகில் சந்தோஷ் சினிமாஸ் என்ற தியேட்டர் செயல்பட்டு வருகிறது. பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது சூறவாளி காற்றின் வேகத்தால் அந்த தியேட்டரின் முகப்பு மற்றும் மேற்கூரை பகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக பிய்த்துக்கொண்டு காற்றில் பறந்தது.

மேலும் அந்த மேற்கூரைகள் ஒன்றின் மீது ஒன்றாக இடிந்து விழுந்தது. தியேட்டரின் மேற்பகுதி மள, மளவென சீட்டுக்கட்டு போல் காற்றில் பறந்து சரிய தொடங்கியது. இந்த சத்தம் கேட்டு, தியேட்டருக்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அலறியடித்தபடி தியேட்டரை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

தியேட்டர் நிர்வாகம் உடனடியாக படம் திரையிடப்படுவதை நிறுத்தி, காட்சிகளை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து தியேட்டர் நிர்வாகம் சார்பில் உடனடியாக கிரேன் உதவியுடன் தியேட்டரின் மேற்கூரையின் சரிந்த பகுதிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story