நீர்பிடிப்பு பகுதியில் மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

பவானிசாகர்

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.77 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 983 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 274 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 104.02 அடியாக இருந்தது. பவானி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com