சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

வண்டல் சேகரிப்புத் தொட்டிகளில் தூர் வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், மழைநீர் வடிகால் பணிகள், குளங்கள் கால்வாய்கள் தூர்வாருதல், வெள்ளத் தடுப்புச் சுவர் உயர்த்திக் கட்டுதல் உள்ளிட்ட வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இதர வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவாது;-

“இன்று (27.06.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், மழைநீர் வடிகால் பணிகள், குளங்கள் கால்வாய்கள் தூர்வாருதல், வெள்ளத் தடுப்புச் சுவர் உயர்த்திக் கட்டுதல் உள்ளிட்ட வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இதர வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது;

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக முடித்திட வேண்டும்.

இணைப்பு இல்லாத மழைநீர் வடிகால்வாய் பணிகளை முடிப்பதற்கு தனிக் கவனம் செலுத்தி இணைப்பினை ஏற்படுத்திட வேண்டும். மழை நீர் வடிகால்வாயில் குப்பைகளைத் தடுத்து மழை நீர் மட்டும் செல்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வண்டல் சேகரிப்புத் தொட்டிகளில் தூர் வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு தூர்வாரிட வேண்டும்.

இதுவரை 36,982 வண்டல் சேகரிப்புத் தொட்டிகளில் 1849.10 மெட்ரிக் மண்ணிற்கு மேலாக வண்டல் மண் தூர் வாரப்பட்டுள்ளது . பெருநகர சென்னை மாநகராட்சியின் 44 நீர் வழிக் கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகளில் தொடர்ந்து தனிக் கவனம் மேற்கொண்டு தூர்வாரிட வேண்டும். தடுப்புச் சுவர் கட்டப்படும் பகுதிகளில் தடுப்புச் சுவர் கட்டும் பணியினை விரைந்து முடித்திட வேண்டும். விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய், வீராங்கல் ஓடை உள்ளிட்ட அனைத்து கால்வாய்களிலும் இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மழை நீரை அதிக அளவில் சேகரிக்கின்ற வகையில் நடைபெற்று வரும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மழை நீர் வடிகால்வாய் சென்றடையும் கால்வாய் சந்திப்புகள் மற்றும் நீர்வழிக் கால்வாய்கள் சென்றடையும் அடையாறு, கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் சேரும் இடங்களில் தங்கு தடையின்றி மழை நீர் செல்கின்ற வகையில் அடைப்புகளை நீக்கி தூர்வாரி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்பணிகளை மேற்கொள்ளும் போது தொடர்புடைய சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். பள்ளிக் கட்டடங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம், கால்நடை காப்பகங்கள், பாலப்பணிகள் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும்.

சென்னையில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில் சாலையின் மையத் தடுப்புகள், சாலையோரங்கள், பாலத்தின் அடிப்பகுதிகள், நீர்நிலைப் பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது இடங்களிலும் அதிக அளவில் மரங்களை நட்டு பசுமைப் பரப்பினை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், இணை ஆணையர் (பணிகள்) செ.சரவணன், வட்டார துணை ஆணையாளர்கள் எச்.ஆர்.கவுஷிக்(மத்தியம்), அதாப் ரசூல்(தெற்கு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com