மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சேலத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
Published on

சேலத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் கார்மேகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தவும், நீர் மேலாண்மைக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் மழைநீரை வீணாக்காமல் அவர்களுடைய இல்லங்களில் சேகரிக்க வேண்டும்.

பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்னதாக தங்கள் வீடுகளில் உள்ள மொட்டை மாடியை சுத்தப்படுத்த வேண்டும். மழைநீர் வடிக்குழாய்களில் அடைப்பு மற்றும் துவாரங்களை சரி செய்வதுடன், வடிகட்டும் தொட்டிகளில் உள்ள கூழாங்கல் மற்றும் கருங்கல் ஜல்லிகளை சுத்தம் செய்து மீண்டும் நிரப்ப வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு

வருகிற 22-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நன்றாக பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பான குறும்படத்தினை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்து பார்த்தார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் திருவள்ளுவர் சிலை, நகராட்சி அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்வராஜ், துணை மேற்பார்வை பொறியாளர் ஜெயகொடி, துணை நிலநீர் வல்லுனர் கல்யாணசுந்தரம், உதவி நிர்வாக பொறியாளர் கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com