சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்: அதிகாரிகள் ஆய்வு

சென்னை மாநகராட்சியின் கீழ் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்: அதிகாரிகள் ஆய்வு
Published on: 

சென்னை,

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் கேரிப்புக் கட்டமைப்பு செயல்பாட்டில் உள்ளதை உறுதி செய்திடவும் தேவைப்படும் இடங்களில் புதிதாக மழைநீர் கேசரிப்பு கட்டமைப்பினை ஏற்படுத்திடவும் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சென்னை பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் செயல்பாட்டில் இருப்பது உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆய்வு

இதன் ஒரு பகுதியாக, இணை ஆணையாளர் (கல்வி) கற்பகம், தண்டையார்பேட்டை மண்டலத்தில் கல்யாணபுரம் சென்னை மேல்நிலைப் பள்ளி மற்றும் கண்ணதாசன் நகர் சென்னை நடுநிலைப்பள்ளி, அண்ணாநகர் மண்டலத்தில் கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் செயல்படும் வகையில் வைத்திருக்கவும், தொடர்ந்து கண்காணித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 206 சென்னை தொடக்கப்பள்ளிகள், 130 சென்னை நடுநிலைப் பள்ளிகள், 46 சென்னை உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 சென்னை மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 417 சென்னை பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள்

இவற்றில் 859 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் செயல்படும் நிலையில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 75 இடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை சீரமைத்திடவும், 142 இடங்களில் புதிதாக மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் இதர கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் செயல்பாட்டில் உள்ளதை உறுதி செய்திடவும், தேவைப்படும் இடங்களில் புதிதாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X