

அர்ஜூன் சம்பத் பேட்டி
தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜன் சம்பத் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சதய விழாவையொட்டி சிவபுராணம் பாடி மாமன்னன் ராஜராஜசோழனுக்கு வழிபாடு செய்யப்பட்டது. ராஜராஜசோழன் சாதி மதத்துக்கு அப்பாற்பட்டவர். சோழர்களின் காலம் பொற்காலம். ஒரு தலைசிறந்த குடியரசு, முடியரசு எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு இலக்கணம் வகுத்தவர் ராஜராஜ சோழன். அவருடைய ஆட்சிக் காலத்தில் நமது நாடு உலகத்திலேயே பணக்கார நாடாக இருந்தது. அதிக அளவில் வர்த்தகம் நடைபெற்றது.
பா.ரஞ்சித் மீதான வழக்கு ரத்து
அப்படிப்பட்டவர் குறித்து அவதூறு பரப்பும் முயற்சியில் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த முறை பேசும்போது மிக தவறாக, அவதூறு பரப்பும் வகையில் ஒரு கருத்தை கூறினார். இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த கால அ.தி.மு.க. அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. ஆனால் இப்போது தான் பேசியது வரலாற்று குறிப்பு என்று கூறி மனுவை சமர்ப்பித்ததால் அவர் மீதான வழக்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தமிழக அரசு மேல்முறையீடு
வரலாற்று ஆய்வாளர்கள் மாமன்னன் ராஜராஜன் சோழன் ஆட்சி காலத்தில் சாதி ஏற்ற தாழ்வு கிடையாது. அனைத்து சமுதாயத்தினருக்கும் மரியாதை கொடுக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்கு நிலங்களை வழங்கியவர் என்ற உண்மைகளை பதிவு செய்து உள்ளனர்.
ஆனால் நீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ளாமல் வழக்கை ரத்து செய்து இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு இந்த வழக்கை உடனடியாக மேல்முறையீடு செய்து ராஜராஜ சோழன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைக்க வேண்டும்.
உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
தமிழகம் முழுவதும் கன மழை காரணமாக வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சென்னையில் வசிக்கும் மக்களுக்கு குடும்ப அட்டைதாரருக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மழைநீர் வடிவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை இன்னும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும். பயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்., தமிழக அரசும் மேற்கொள்கின்ற வெள்ள நிவாரண பணிகளுக்கு மத்திய அரசும் உரிய நிதி ஒதுக்கி தமிழக மக்களை காக்க வேண்டும்.
சாதி, மத சாயம் பூசுவதை முறியடிக்க வேண்டும்
திருவள்ளுவரை ஒரு மதத்தை சார்ந்தவராக சித்தரித்து வருகிறார்கள். திருவள்ளுவர், ராஜராஜ சோழன் ஆகியோர் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் மீது சாதி, மத சாயம் பூசுவதை முறியடிக்க வேண்டும். நாங்கள் வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி கேட்டு இருந்தோம்.
ஆனால் அரசு தடை விதித்துள்ளது. அதனை நாங்கள் ஏற்று உடையாளூரில் உள்ள ராஜராஜ சோழன் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்த உள்ளோம். அங்கு அவருக்கு கோவில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். அரசும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.