

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை முயற்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அருகே அமைந்துள்ள நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அவர்கள் கைகளில் துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.
அந்த சமயத்தில் ஊழியர் ஒருவர் பாதுகாப்பு எச்சரிக்கை மணியை ஒலிக்க விட்டார். இதையடுத்து கடையில் இருந்த அனைத்து ஊழியர்களும், பாதுகாவலர்களும் துணிச்சலாக செயல்பட்டு கொள்ளையர்களை எதிர்த்து, கொள்ளை முயற்சியை தடுக்க முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் கடையில் இருந்து தப்பியோடினர். அவர்கள் செல்லும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.