

துணை சபாநாயகராக பொறுப்பேற்ற ராஜவேலுவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
போட்டியின்றி தேர்வு
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசில் சபாநாயகர் பதவி பா.ஜ.க.வுக்கும், துணை சபாநாயகர் பதவி என்.ஆர்.காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டது. இதன்படி சபாநாயகராக மணவெளி தொகுதியில் இருந்து தேர்வான செல்வம் பதவி வகித்து வருகிறார்.
இந்தநிலையில் காலியாக இருந்த துணை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜவேலு மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் போட்டியிடாததால் ராஜவேலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியானது.
ரங்கசாமி வாழ்த்து
இந்தநிலையில் புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. துணை சபாநாயகராக ராஜவேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டசபையில் சபாநாயகர் செல்வம் அறிவித்தார். அதைத்தொடர்ந்து துணை சபாநாயகரின் இருக்கையில் ராஜவேலுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய் சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்க்ள அங்காளன், ஜான்குமார், வைத்தியநாதன், வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஏ.கே.டி.ஆறுமுகம், செந்தில்குமார் நாஜிம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். துணை சபாநாயகர் ராஜவேலு ஏற்புரையாற்றினார்.