திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜிக்கு, கைதிகளுக்கான உணவே வழங்கப்பட்டது

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு, சக கைதிகளுக்கான உணவே வழங்கப்பட்டது.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜிக்கு, கைதிகளுக்கான உணவே வழங்கப்பட்டது
Published on

திருச்சி,

ஆவின் நிறுவனத்தில் பலருக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடிக்கு மேல் பணம் மோசடி செய்ததாக அ.தி.மு.க.வில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நேற்று முன்தினம் பிற்பகல் போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா பரிசோதனை முடிவு வராததால், அங்கு சிறையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிலை கடத்தல் மன்னன் இருந்த அறை

ராஜேந்திரபாலாஜி அடைக்கப்பட்டுள்ள அறை, உயர்பாதுகாப்பு வசதி கொண்டது. அங்கு அவர் அறை எண் 4-ல் அடைக்கப்பட்டுள்ளார். இந்த அறையில்தான், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் என்பவர் அடைக்கப்பட்டிருந்தார். பாதுகாப்பு காரணமாக அவர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டதால் அந்த அறையில் ராஜேந்திரபாலாஜி அடைக்கப்பட்டார்.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்காக தொடர்ந்து ராஜேந்திரபாலாஜி மாத்திரைகள் சாப்பிட்டு வருவதால், சிறைத்துறையினர் அவரை வழக்கம்போல அம்மாத்திரைகளை சாப்பிட அனுமதித்தனர்.

கைதிகளுக்கான உணவு

அன்றைய தினம் அறையில் உள்ள தொலைக்காட்சியில் இரவு 11 மணி வரை நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்த அவர் பிறகு படுத்து தூங்கினார். நேற்று காலை இனிப்பு இல்லாத டீ சாப்பிட்டார். அதன் பின்னர் சிற்றுண்டியாக உப்புமா சாப்பிட்டார். விசாரணை கைதி என்பதால், அவர் அணிந்திருந்த ஆடையையே அணிந்திருந்தார். மதியம் சக கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவான தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com