ரஜினிகாந்த் 25-ந் தேதி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து 5-ந் தேதி சென்னை திரும்புகிறார். 25-ந் தேதி மன்ற நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
ரஜினிகாந்த் 25-ந் தேதி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளதால், தனது மன்றங்களை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்பதை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றினார். தொடர்ந்து மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, 32 மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

தற்போது பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கும் பணி நடந்துவருகிறது. இதைத்தொடர்ந்து, கட்சியின் பெயர் அறிவிப்பை வெளியிட ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அந்த அறிவிப்புக்காக அவரது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 23-ந் தேதி அமெரிக்கா சென்றார். வருகிற 5-ந் தேதி அவர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு 8,500 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து ரஜினிகாந்த் கட்சியின் பெயர் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். அதன்படி வரும் 25-ந் தேதி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த ரஜினி மன்ற நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு ரஜினிகாந்த் மன்ற பணிகளுடன் தான் ஒப்புக்கொண்டுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பிலும் இடைவிடாமல் கலந்துகொள்ள இருக்கிறார். ஜூன் மாதத்தில் காலாவும், தீபாவளி தினத்தில் 2.0 படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது. அரசியலுக்கு அடித்தளமிடும் புதிய படத்தை அடுத்த ஆண்டு தை பொங்கலில் வெளியிடவும் ஏற்பாடு நடக்கிறது.

அதன்பிறகு சினிமா பயணத்தில் இருந்து விலகி, தீவிர அரசியல் பயணத்தில் ரஜினிகாந்த் முழு வீச்சில் இறங்குவார் என்று அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com