

சென்னை,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த 22-ந்தேதி நடந்தது. அப்போது வன்முறை ஏற்பட்டது. இதனால் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்று கூறினார். ரஜினிகாந்தின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறியதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர் ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக விரோதிகள் என மக்களை ரஜினிகாந்த் கூறவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- சமூக விரோதிகள் என மக்களை ரஜினிகாந்த் கூறவில்லை. தூத்துக்குடியில் தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டது சமூக விரோதிகள்தான். திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது தவறு என்றார்.