ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் - கவர்னருக்கு, டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை தாமதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக கவர்னரை டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் - கவர்னருக்கு, டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று 2018-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதனடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும்படி தமிழக கவர்னருக்கு பரிந்துரைக்கும் தீர்மானத்தை கடந்த 9.9.2018 அன்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியது. அதன்பின் 516 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை அதன் மீது முடிவெடுக்காமல் இருப்பதை கவர்னர் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இந்த 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராஜீவ்காந்தியின் துணைவியார் சோனியாகாந்தியும், புதல்வர் ராகுல்காந்தியும் பல்வேறு கால கட்டங்களில் கூறியுள்ளனர். இவ்வளவுக்கு பிறகும் இது தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்க காலநிர்ணயம் செய்யப்படவில்லை என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு 7 தமிழர் விடுதலையை கவர்னர் தாமதித்தால் அதை விட கொடுமையான மனித உரிமை மீறல் எதுவும் இருக்க முடியாது. அதை தமிழ்நாடும் ஏற்காது.

எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான ஆணையை கவர்னர் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான 10 புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில், அடையாள நிதி ஒதுக்கீட்டைத் தவிர, வேறு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட ரெயில் பாதை திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவை ரெயில் பாதைகள்தான். அதைக் கருத்தில் கொண்டுதான் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வடக்கு மாவட்டங்களை முன்னேற்றும் நோக்கத்துடன் திண்டிவனம்-நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை, சென்னை-மாமல்லபுரம்-கடலூர், அத்திப்பட்டு-புத்தூர், தர்மபுரி-மொரப்பூர், ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி ஆகிய புதிய ரெயில் பாதைகளை பா.ம.க.வைச் சேர்ந்த மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால், அதன்பின்னர் வேறு நிதி எதுவும் ஒதுக்கப்படாததால் அந்த திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழகத்தின் 10 புதிய ரெயில் பாதைகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றும் வகையில், அவற்றுக்கு போதிய அளவு நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com