

விழுப்புரம்,
விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கில் மத்திய அரசு வக்கீல், சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய வரம்பை மீறியும், தன் தகுதிக்கு குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி பேசி இருக்கிறார். இந்த கருத்தை அவர் தெரிந்தே சொன்னாரா என்று தெரியவில்லை. மத்திய அரசின் கீழ் வரும் குற்றங்களுக்கு மத்திய அரசினுடைய அனுமதியை பெற வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் கருணை மனு, கவர்னரிடம் இருக்கும்போது அதுதொடர்பாக கவர்னர் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தமிழகத்தின் முடிவை கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. இதில் கவர்னர்தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசை கேட்க வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்க முழு உரிமை கவர்னருக்கு உள்ளது. இதில் கவர்னர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும்.
மத்திய அரசின் வக்கீல், நீதிமன்றத்தில் வழக்கு என்று வருகிறபோது வேண்டுமென்றே தேவையற்ற தன் தகுதிக்கு குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஒரு மாநில அரசின் அதிகாரத்தை, கேள்வி கேட்கும் அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது. இதை மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பி இருக்கிறோம். கவர்னர், இந்த காலக்கெடுவுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என எந்த கட்டாயமும் கிடையாது. அதனால் அவர் நல்ல முடிவு எடுப்பார் என தமிழக அரசு நம்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.