சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு அடிப்படை வசதி ஏன் செய்து கொடுக்கவில்லை? - மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு ஏன் அடிப்படை வசதி செய்து கொடுக்கவில்லை? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு அடிப்படை வசதி ஏன் செய்து கொடுக்கவில்லை? - மு.க.ஸ்டாலின் கேள்வி
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள மருத்துவ மாணவர்கள் ஆகியோருக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் கூறி போராட்டம் நடத்திய செய்தி கொரோனாவை விட கொடூரமானது.

மக்களை காக்கும் மருத்துவர்களுக்குக்கூட போதிய வசதி செய்துதர முடியாத அரசாங்கமா இது? இது மக்களை காக்கும் அரசா?

தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும் வாசித்தால் போதுமா? சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாக கவனிக்க முடியாத இவர்கள், பல லட்சம் மக்களை எப்படி காப்பாற்றப்போகிறார்கள்? சென்னை போன்ற பெருநகரில் உள்ள பொது மருத்துவமனையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற மருத்துவமனைகள் பற்றி சொல்லத்தேவையில்லை தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றி சரி செய்வது?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒன்றிணைவோம் வா

மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா குறித்த விழிப்புணர்வை சட்டமன்றம் தொடங்கி மக்கள் மன்றம் வரை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது, திராவிட முன்னேற்ற கழகம். கொரோனா நோய் எதிர்ப்பு பணியில் எங்கே யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படும் பணியினை தி.மு.க.வினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த பணியின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருப்பதுதான் ஒன்றிணைவோம் வா என்கிற புதிய செயல்பாட்டுத் திட்டம். எட்டுத்திசைகளிலும் மேற்கொள்ளப்படும் பணிகளை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைத்து, தேவையுள்ளோர் அனைவருக்கும் உதவிக்கரம் எட்டிட, விரைவான செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

பட்டினி சாவை தடுப்போம்

இந்த செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம் பட்டினிச்சாவை தடுப்பதே!

ஏழை-எளியோர், எதுவும் இல்லாதோர் ஆகியோர் ஊரடங்கால் வேலையின்றி வருமானம் இழந்து தவித்திடும் நிலையில், அவர்களின் பசியாற்றும் அமுத சுரபியாக தி.மு.க.வின் செயல்பாடு அமைந்திட வேண்டும்.

தமிழர்கள் எங்கு துயர்ப்பட்டாலும் இந்த எண், அவர்களுக்கான உதவிக்கரமாக நீளும். பல பகுதிகளிலிருந்தும் வருகின்ற அழைப்பினை ஒற்றை புள்ளியில் ஒருங்கிணைக்கவும், உரிய முறையில் செயல்படுத்தவும் மக்களுக்கான உதவி எண்ணான 90730 90730 என்ற அலைபேசி எண் வாயிலாக, என் கவனத்திற்கு அவரவர் தேவைகளை நெருக்கடிகளை கொண்டுவர முடியும்.

நேரடியாக தீர்வு காண்பேன்

உணவு, குடிநீர், மருத்துவ உதவி, அத்தியாவசிய தேவைகள் குறித்து என் அலுவலகத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

144 தடையுத்தரவு காரணமாகவோ, உள்ளூர் நிலவரம் காரணமாகவோ ஏதேனும் ஒரு கோரிக்கையை நிறைவேற்ற இயலாமல் போனால், அது குறித்து என் கவனத்திற்கு கொண்டு வரப்படும். அது குறித்து நானே நேரடியாகவோ தீர்வு காண வழி வகுப்பேன்.

மேலும் நமது முயற்சிகளில், உதவி செய்திட முன்வரும் நல்லோர்களை ஒன்றிணைத்து கூட்டாகச் செயல்பட வேண்டும். இதற்காக www.on-d-r-i-n-a-iv-o-mv-aa.in என்ற வலைத்தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்-அப் குழு

அடுத்து வரவிருக்கும் காலகட்டத்தில், மக்கள் எதிர்கொள்ளும் சமூக பொருளாதார சவால்களில் அவர்களுக்கு துணையிருக்கும் வகையில் தொண்டர்கள் தங்கள் அக்கம் பக்கத்தினரைத் தொடர்பு கொண்டு, அவர்கள் அடிப்படைத் தேவைகளை அறிந்துகொள்ள வேண்டும்.

அதற்கென அவரவர் ஒரு வாட்ஸ்-அப் குழுவினைத் துவங்கி அக்கம்பக்கத்தினரை அதில் இணைத்துக்கொள்ளலாம்.

ஒருங்கிணைந்து செயல்படுவோம்

பொதுமக்களின் உதவி எண், நல்லோர் கூடம், ஏழை, எளியோருக்கு உணவு, ஸ்டாலினுடன் இணைவோம், மெய்நிகர் வட்டார குழுக்கள். இந்த 5 கட்டங்களின் வாயிலாக பேரிடர் காலத்தில் தமிழக மக்களுக்கு உதவிட திட்டமிடப்பட்டுள்ளது.

நல்லோர் கூடத்தில் உதவிசெய்யும் மனப்பான்மை கொண்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை நம்முடன் இணைக்க முடியும். மேலும் நமது தொண்டர்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை வட்டார வாட்ஸ்-அப் குழுக்களால் இணைத்து அவர்களுடைய தேவைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்ய முடியும்.

உங்களோடு இணைந்து நிற்கிறேன். ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. எம்.பி.க்கள் தயார்

மு.க.ஸ்டாலின் நேற்று இரவு வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், கொரோனா நோய் தொற்றால் மாநிலமே பேரிடரில் சிக்கித்தவிக்கும் நேரத்தில் மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து முறைப்படி கிடைக்க வேண்டிய அதிகப்படியான நிதிகூட கிடைக்காமல் தமிழகம் நிதியுரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது. மாநில நிதி உரிமையை மீட்டெடுக்க, மத்திய அரசை வலியுறுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை முதல்-அமைச்சருக்கு வழங்கிட தி.மு.க. எம்.பி.க்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறார்கள். என்று கூறியுள்ளார்.

டாக்டர் மனைவிக்கு ஆறுதல்

கொரோனா தொற்றால் மரணம் அடைந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் சைமன் ஹெர்குலசின் மனைவி ஆனந்தியை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com