தினத்தந்தி செய்தி எதிரொலி: ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் அமைச்சர் சேகர்பாபு உடனடி ஆய்வு

தினத்தந்தி செய்தி எதிரொலியாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் அமைச்சர் சேகர்பாபு உடனடி ஆய்வு மேற்கொண்டார். கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை 6 மணி நேரத்துக்குள் உறவினர்களிடம் ஒப்படைக்க அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
தினத்தந்தி செய்தி எதிரொலி: ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் அமைச்சர் சேகர்பாபு உடனடி ஆய்வு
Published on

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை வைப்பதற்கு பிணவறையில் இடம் இல்லாததால், நுழைவு வாயில் அருகே வைக்கப்படுகின்றன. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாக தினத்தந்தியில் நேற்று செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன், எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன் ஆகியோர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை உடனடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்து ஆஸ்பத்திரி டீன் டாக்டர் தேரணிராஜனிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேட்டறிந்தார்.

பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை பரிசோதனை மேற்கொண்டு, பிணவறையில் தேங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகாத வகையில், உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர்களின் உடல்கள் பிணவறை பாதுகாப்பு அறைக்கு வெளியே இருப்பதாக தினத்தந்தியில் செய்திவந்தது. அந்த செய்தியை தொடர்ந்து இங்கு உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டோம்.

தற்போது அப்படி வெளியே வைக்கப்பட்டிருந்த உடல்கள் மாற்று ஏற்பாடாக, குளிர்சாதன வசதியுடன் இருக்கின்ற அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஒரு வருட காலமாக, உரிமை கோரப்படாத 52 உடல்கள் இங்கு வைக்கப்பட்டு உள்ளன. முறையாக உரிமை கோரப்படாத அந்த உடல்களை, மருத்துவக்கல்லூரி மற்றும் போலீஸ் அனுமதியுடன் தான் அகற்ற வேண்டும். அந்த பணிகளை கடந்த காலத்தில் துரிதப்படுத்தாததால் இந்த நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை இங்கிருந்து, போலீசாருக்கு தெரிவித்து உடனடியாக உடல்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய ஆய்வு ஆஸ்பத்திரி பிணவறையோடு மட்டும் நின்று விடாமல், தொடர்ந்து மயானங்களுக்கும் செல்ல இருக்கிறோம். அங்கு மயானங்களுக்கு வருகிற உடல்களை உடனடியாக, அடக்கம் செய்வதற்கோ அல்லது எரியூட்டுவதற்கு உண்டான சாத்தியக்கூறுகளை ஆராய இருக்கிறோம். எந்த ஆஸ்பத்திரியிலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் 2 நாட்களுக்குமேல் இருப்பதில்லை.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை 6 மணி முதல் 8 மணி நேரத்துக்குள் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசு ஆஸ்பத்திரி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டு உள்ளோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் இனி ஒரு நாளுக்கு மேல் பிணவறையில் தேங்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com