ராஜீவ் கொலையாளிகள் விடுதலை குறித்து கவர்னருக்கு தமிழக அரசு கடிதம் விரைந்து முடிவெடுக்க பரிந்துரை

ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியான நிலையில், தமிழக அரசு, கவர்னருக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளது.
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை குறித்து கவர்னருக்கு தமிழக அரசு கடிதம் விரைந்து முடிவெடுக்க பரிந்துரை
Published on

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்கள் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதால் இவர்கள் 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவு எடுக்கலாம். இதுதொடர்பாக தமிழக கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பு வெளியானதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், 7 பேரையும் விடுதலை செய்யும் பரிந்துரை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்காததால், முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. 7 பேர் விடுதலையில் கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதுதொடர்பாக தினத்தந்தியில் கடந்த 2-ந் தேதி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து கவர்னர் இன்னும் முடிவு எடுக்காதது ஏன்? பரபரப்பு தகவல்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியானது. அந்த செய்தியில், ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டபோது, அவருடன் பலர் உயிரிழந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

எனவே, இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தாம் எந்தவித முடிவும் எடுக்க முடியாது என்பதால் தான் கவர்னர் பன்வாரிலால் புரோகித் 7 பேர் விடுதலை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் மீது முடிவு தெரிந்த பிறகே கவர்னரும் தனது முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது என்று அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் தமிழக அரசு கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதுவது குறித்து ஆலோசித்து வருகிறது. இதுபற்றி தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபாலுக்கு கடிதம் எழுத உள்ளார்.

அதில், தமிழக அரசின் பரிந்துரை தீர்மானத்தின் அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட உள்ளது. தற்போது விடுமுறை என்பதால் அதற்கு பிறகு கவர்னருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com