டெல்லி பேரணியில் போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு: வைகோ, கி. வீரமணி கண்டனம்

டெல்லி பேரணியில் போலீசாரின் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சுக்கு வைகோ மற்றும் கி. வீரமணி கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
டெல்லி பேரணியில் போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு: வைகோ, கி. வீரமணி கண்டனம்
Published on

சென்னை,

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதத்திற்கு மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

இதற்கு டெல்லி போலீசார் முதலில் அனுமதி மறுத்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை விவசாயிகளின் ஒரு தரப்பினர் ஏற்று கொண்டாலும், மற்றொரு தரப்பினர் தடுப்புகளை உடைத்து கொண்டு டெல்லிக்குள் நுழைய முயன்றனர். டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர்.

ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுக்க முயன்றனர். ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காசிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

இதனைத்தொடர்ந்து போலீசார் தண்ணீர் டாங்கிகளை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் அவர்களின் டிராக்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதிலும் போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். மேலும் விவசாயிகள் ஆயுதங்களை சுழற்றியும், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர்.

தற்போது செங்கோட்டையை சுற்றி விவசாயிகள் திரண்டிருப்பதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில், போலீசாரின் தடுப்புகளை மீறி விவசாயிகள் சென்றனர் என கூறி அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. கூட்டத்தினரை கலைக்க சில இடங்களில் தடியடியும் நடத்தப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்தியில், குடியரசு தினமான இன்று விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சை மத்திய அரசு நடத்தி இருக்கிறது.

இந்த அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன் என கூறியுள்ளார். அவர் தொடர்ந்து, பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்து, விவசாயிகளை ஒடுக்க நினைத்தால் விபரீத முடிவே ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தி.க. தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், குடியரசு நாளில் விவசாயிகள் மீது தாக்குதலா? விவசாயிகளின் போராடும் உரிமைகளை புதைகுழிக்கு அனுப்பலாமா? நடப்பது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com