ரம்ஜான் பண்டிகை - செல்வப்பெருந்தகை வாழ்த்து

சமூக நல்லிணக்கம், தர்மம், சகோதரத்துவம், தன்னடக்கம் போன்ற உயரிய பண்புகளை பின்பற்றுவது ரம்ஜான் பண்டிகையின் உன்னத நோக்கமாக அமைகிறது.
ரம்ஜான் பண்டிகை - செல்வப்பெருந்தகை வாழ்த்து
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இஸ்லாமிய பெருமக்களின் மிக உன்னதமான பண்டிகை ரம்ஜான். ஒழுக்கம், தியாகம், மனிதநேயம் ஆகிய உயர்ந்த பண்புகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் முஸ்லிம் சமூகத்தின் பண்புகள் பாராட்டத்தக்கது. அன்பு, பகிர்வு மற்றும் சகோதரத்துவத்தை நடைமுறையில் கடைபிடிக்கும் இவர்களின் வாழ்க்கை முறை அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது.

இம்மாதத்தில் நோன்பு ஏற்பது அவர்களது முக்கிய கடமைகளில் ஒன்றாகும். சமூக நல்லிணக்கம், தர்மம், சகோதரத்துவம், தன்னடக்கம் போன்ற உயரிய பண்புகளை பின்பற்றுவதில் இவர்களது பங்கு மகத்தானது. இதுவே ரம்ஜான் பண்டிகையின் உன்னத நோக்கமாக அமைகிறது.

பன்முக கலாச்சாரத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கென்று ஒரு கருத்தியலை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கிற வகையில் அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறுபான்மை மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மதச் சுதந்திரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மற்றும் பாகுபாடு தொடர்கிறது. இந்தியாவில் மத சிறுபான்மையினர் மீது பொது சிவில் சட்டம், வக்பு வாரிய சட்டம் ஆகியவற்றை திணித்து மிகப்பெரிய அச்சுறுத்தலை பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வருகிறது.

சிறுபான்மையினர் எதிர்கொள்கிற ஆபத்திலிருந்து அவர்களை பாதுகாக்க தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தலைமையில் நாடு முழுவதிலும் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை காக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, அனைத்து மக்களையும் சாதி, மத, பேதமில்லாமல் சமமாக கருதுவது தான் மதச்சார்பின்மை என்பதை ரம்ஜான் பண்டிகை செய்தியாக தமிழக காங்கிரஸ் கட்சி கூற விரும்புகிறது.

எனவே, இந்த ரம்ஜான் பெருநாளில் அனைவருக்கும் கொடை வழங்கி, அவர்களுடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள், தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், ஏற்றமும் பெறவும், சகோதரத்துவம் தழைக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய ரம்ஜான் பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com