இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இஸ்லாமிய தோழர்களின் நலன் காக்கும் அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள். கல்வியை ஆண், பெண் இருவருக்கும் சமமாக்கியது, நீதி மற்றும் அமைதியை வலியுறுத்தியது, ஏற்றத்தாழ்வை அறவே எதிர்த்தது, சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் வலியுறுத்தியது என அவர் காட்டிய வழி அனைவரும் பின்பற்றத்தக்கதாகும். இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்தவர் நபிகள் நாயகம்.

அவரது வழியில் வாழ்ந்து வரும் இஸ்லாமியத் தோழர்களின் நலன் காக்கும் அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது. 2007-ல் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் உருவாக்கியது, மீலாடிநபிக்கு அரசு விடுமுறை, இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு என எத்தனையோ சாதனைகளைச் செய்த கருணாநிதியின் வழியில், எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டைக் கொண்ட நமது திராவிட மாடல் அரசும் அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

இதற்கெல்லாம், முத்தாய்ப்பாக மத்திய பா.ஜ.க அரசு நிறுத்திவிட்ட சிறுபான்மையின மாணவர்களுக்கான Pre-matric scholarship, தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ப் வாரியம் மூலம் வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறோம்.

இஸ்லாமியரைப் பாகுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி, இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் உரிமைகளுக்காக என்றும் முன்னிற்கும் பெருமிதத்தோடு, உரிமையோடு இஸ்லாமியத் தோழர்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com