

சென்னை,
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரும் பாமக நிறுவனர் ராமதாசின் மனுவை 3 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என சென்னை சிட்டி சிவில் கோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 23-ந்தேதி உத்தரவிட்டது. அதன்படி, ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை சிவில் கோர்ட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்து, தேர்தல் ஆணையத்தை அணுக ராமதாசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜோய்மால்ய பாக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது ராமதாஸ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விகாஸ் சிங், 'யாருக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படும் என்பது இதுவரை தெளிவாகவில்லை. மாம்பழம் பொது சின்னமாக இருந்தால் குலுக்கல் முறையிலோ அல்லது முதலில் வருபவருக்கோ முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும்.
மாம்பழம் பொது சின்னம் இல்லை என்ற நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். பொது சின்னம் இல்லையென்றால் யாருக்கும் ஒதுக்க முடியாது. தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்கு முன்னதாக இந்த விவகாரத்தில் தீர்வு காண தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார்.
'அன்புமணி ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பாமக' என அன்புமணி தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய ராமதாசுக்கு உத்தரவிட்டனர்.
தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டு ஐகோர்ட்டும் விரைந்து இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில் மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோருவதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி வழக்கு தாக்கல் செய்ய உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்க ராமதாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.