தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பை தமிழக இளைஞர்களுக்கு வழங்க சட்டம்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பை தமிழக இளைஞர்கள் - இளம்பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பை தமிழக இளைஞர்களுக்கு வழங்க சட்டம்: ராமதாஸ்
Published on

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்புகள்

அரியானா மாநில தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 சதவீதத்தை உள்ளூர் மக்களுக்கே வழங்குவதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு இயற்றிய சட்டத்திற்கு அரியானா - பஞ்சாப் ஐகோர்ட்டு விதித்த இடைக்காலத் தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியுள்ளது. இந்த தீர்ப்பு மூலம், அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. தனியார் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் அரியானா மாநிலத்தில் மட்டும் நடைமுறையில் இல்லை. ஆந்திரத்தில் தனியார் நிறுவன பணிகளில் 75 சதவீத உள்ளூர் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்ற வேண்டும்

அதனால், தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள ஆந்திரம், தெலுங்கானம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தமிழர்களுக்கு வேலை கிடைக்காது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள வேலைகள் பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. அதைக் கட்டுப்படுத்த தமிழக ஆட்சியாளர்களால் முடியவில்லை.

சட்டசபை தேர்தலின்போது, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீத வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டுவரப்படும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய தமிழக அரசுக்கு உள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 சதவீதத்தை தமிழக இளைஞர்கள் - இளம் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும்.

மார்ச் மாதத்தில் கூடவிருக்கும் சட்டசபை நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரிலேயே இச்சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com