ராமநாதபுரம் அருகே கரை ஒதுங்கிய கடல் பஞ்சுகள் - எல் நினோ தாக்கம் காரணமா?

கடற்கரை பகுதியில் ஆங்காங்கே பல இடங்களில் சிவப்பு நிறத்தில் ஒரு விதமான கடல் பஞ்சுகள் அதிக அளவில் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
ராமநாதபுரம் அருகே கரை ஒதுங்கிய கடல் பஞ்சுகள் - எல் நினோ தாக்கம் காரணமா?
Published on: 

ராமநாதபுரம்,

உச்சிப்புளி அருகே மானாங்குடி கடற்கரையில் கடல் பஞ்சுகள் கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றிய கடல் பகுதியில் கடல் பசு, டால்பின், கடல் குதிரை, கடல் பன்றி, பவளப்பாறைகள் உள்ளிட்ட 3,600 வகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

கரை ஒதுங்கிய கடல் பஞ்சுகள்

இதற்கிடையே உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம் முதல் மானாங்குடி, நொச்சியூரணி வரையிலான கடற்கரை பகுதியில் ஆங்காங்கே பல இடங்களில் சிவப்பு நிறத்தில் ஒரு விதமான கடல் பஞ்சுகள் அதிக அளவில் கரை ஒதுங்கி கிடக்கின்றன. இவ்வாறு கடற்கரை பகுதி முழுவதும் கரை ஒதுங்கி கிடக்கும் கடல் பஞ்சுகள், காய்ந்த பஞ்சுகள் வெள்ளை நிறத்திலும், அவ்வப்போது ஒதுங்கும் கடல் பஞ்சுகள் லேசான சிவப்பு நிறத்திலும் காட்சியளித்து வருகிறது.

எல் நினோ காரணமா?

எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் கடற்கரை பகுதிகளில் இந்த கடல் பஞ்சுகள் கரை ஒதுங்கி வருகிறது என கூறப்படும் நிலையில், இதனை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விலங்கு வகையை சேர்ந்த உயிரினம்

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடல் நீரை சுத்தப்படுத்துவதில் கடல் பஞ்சுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முதுகெலும்பில்லாத கடல் பஞ்சு உயிரினமும் விலங்கு வகையை சேர்ந்ததுதான். கடலின் அடியில் உள்ள பாறைகள் மற்றும் பவளப்பாறைகளை ஒட்டியே இந்த கடல் பஞ்சுகள் வாழ்ந்து வரும். கடலில் உள்ள சில சிறிய நுண்ணுயிர்களை உட்கொண்டு வாழக்கூடிய இந்த கடல் பஞ்சு, கடல் நீரை தூய்மைப்படுத்துவதிலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.

அதேபோல அடிக்கடி கடல் சீற்றம், நீரோட்ட வேகத்தால் தாழை செடி, பாசி, கடல் புற்களே கரை ஒதுங்கி வந்த நிலையில் தற்போது கடல் பஞ்சுகளும் கரை ஒதுங்கி வருவது எல் நினோ பருவமழை மாற்றத்தால் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com