ராமநாதபுரம்: வயலில் வேப்ப விதைகள் சேகரித்தபோது நடந்த சோகம்

வீட்டின் அருகே வயலில் வேப்ப விதைகள் சேகரிக்க சென்றபோது இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியகுடி ஊராட்சி வாழவந்தாள்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் நூருல் அமீன். தனியார் பஸ் டிரைவர். இவருடைய மகள்கள் செய்யது அஸ்பியா பானு (வயது 13), சபிக்கா பானு (வயது 9). மூத்த மகள் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பும், இளைய மகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை என்பதால் அக்காள், தங்கை இருவரும் வீட்டின் அருகே வயலில் வேப்ப விதைகள் சேகரிக்க சென்றனர். அப்போது இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் செய்யது அஸ்பியா பானு, சுபிக்கா பானு ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர், குடும்பத்தினர், உயிரிழந்து கிடந்த சிறுமிகளின் உடல்களை பார்த்து அழுதனர். இது அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






