ராமநாதபுரம்-மதுரை மாவட்ட கலெக்டர்களிடம் தேவர் தங்க கவசத்தை ஒப்படைக்க வங்கி அதிகாரிகள் முடிவு ?

இரு அணிகளும் கேட்பதால் ராமநாதபுரம்-மதுரை மாவட்ட கலெக்டர்களிடம் தேவர் தங்க கவசத்தை ஒப்படைக்க வங்கி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்-மதுரை மாவட்ட கலெக்டர்களிடம் தேவர் தங்க கவசத்தை ஒப்படைக்க வங்கி அதிகாரிகள் முடிவு ?
Published on

மதுரை

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தேவர் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் நாளை மறுநாள் தேவர் ஜெயந்தி விழா தொடங்குகிறது. இந்த நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் 13.5 கிலோ தங்க கவசத்தை கடந்த 2014-ம் ஆண்டு அணிவித்தார்.

ரூ.4.5 கோடி மதிப்பிலான இந்த தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவின்போது அ.தி.மு.க. சார்பில் முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது. ஜெயந்தி விழா முடிந்ததும் தங்க கவசம் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.

இந்த தங்க கவசத்தை எடுக்கும் பொறுப்பாளராக பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிட அறங்காவலர் மற்றும் அ.தி.மு.க.வின் பொருளாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை அ.தி. மு.க.வின் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தங்க கவசத்தை வங்கி பெட்டகத்தில் இருந்து எடுத்து தேவர் நினைவிட நிர்வாகிகளிடம் ஒப்படைத்து வந்தார்.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. வில் பிளவு ஏற்பட்டது. அ.தி.மு.க. பொருளாளர் பதவியில் நிலவி வரும் குழப்பம் காரணமாக தேவரின் தங்க கவசத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தங்க கவசத்தை பெறுவதற்காக மதுரை அண்ணாநகரில் உள்ள அரசு வங்கிக்கு இன்று காலை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனி வாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வந்தனர்.

அதன் பின்னர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வங்கிக்கு வந்தார். இவர்கள் உள்ளே சென்ற பிறகு வங்கியின் கதவுகள் மூடப்பட்டது. வங்கி முன்பு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர்.

சிறிது நேரத்தில் தினகரன் ஆதரவாளர் மேலூர் சாமி தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். அவர் வங்கியின் மற்றொரு வாசல் வழியாக உள்ளே சென்றார். ஓ.பன்னீர்செல்வம், தினகரன் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அப்போது மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் ஜெயபால் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சின்னம்மா வாழ்க... தினகரன் வாழ்க... என்று கோஷமிட்டப்படி ஊர்வலமாக வந்தனர். இதற்கு எடப்பாடி பழனி சாமி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து எதிர் கோஷமிட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

வங்கி முன்பு இரு அணிகளை சேர்ந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். மோதல் ஏற்படாத வண்ணம் அவர்களை தனித்தனியாக போலீசார் அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது.

இந்த நிலையில் இரு அணியினரும் கவசத்தை கேட்பதால் ராமநாதபுரம் மதுரை மாவட்ட கலெக்டர்களிடம் கவசத்தை ஒப்படைக்க வங்கி அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இந்த முடிவுக்கு தினகரன் அணிசார்பில் சம்மதம் தெரிவித்து உள்ளனர். எடப்பாடி அணிசார்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 3 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் . இதை தொடர்ந்து மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வங்கிக்குள் சென்று உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com