தமிழக மீனவர்கள் கடத்தல்காரர்களா?: அண்ணாமலைக்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

தமிழக மீனவர்களை கடத்தல்காரர்கள் என அவதூறு செய்த பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் கண்டனம் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களின் விசைப் படகுகளையும், நாட்டுப் படகுகளையும் மீட்டுத் தரக் கோரியும், இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் 4 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு செவிமடுக்காத நிலையில், திருவோடு ஏந்தும் போராட்டம், தீக்குளிப்பு போராட்டம் என அடுத்தடுத்த போராட்ட அறிவிப்புகளை மீனவர்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதும், மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சொந்த நாட்டு குடிமகனின் உயிரை காப்பாற்ற வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும். ஆனால், தமிழக மீனவர்கள் விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்படுகின்றன என்பதையே நடக்கும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
தற்போது இலங்கையில் 80 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நீதிமன்றக் காவலில் இருப்பதாகவும், 169 மீன்பிடி விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்காது வேடிக்கை பார்ப்பதன் மூலம் மீனவர்களை மூன்றாம் தர குடிமக்களாக மத்திய, மாநில அரசுகள் பார்க்கிறதா என்ற சந்தேகம் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து, இந்திய குடிமக்களாகிய தமிழக மீனவர்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்கும் பொருட்டு, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக மீனவர்களின் இந்தப் போராட்டத்தையும், மீனவர்களின் கோரிக்கைகளையும் திசை திருப்பும் வகையில், மீனவர்கள் கடத்தலில் ஈடுபடுகிறார்கள் அதனால்தான் இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்கிறது என மிக அபாண்டமான அவதூறு தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு கண்டனத்திற்குரியது.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாகவும், மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வலியுறுத்தியும் மீனவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் முன்னெடுக்கும் அனைத்து வகையான ஜனநாயக போராட்டங்களுக்கும் எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவளிக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






