

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா வரும் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அவ்விழாவிற்கு ராமேசுவரம் மீனவர்கள் நாட்டுப்படகில் செல்ல தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்த ஆண்டும் தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகு மீனவர்களின் நூற்றாண்டு கால உரிமையை பறிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.
மீனவர்களின் வாதப்படி விசைப்படகுக்கும், நாட்டுப்படகுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவகை படகுகளுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. நாட்டுப்படகு என்பது பாய்ச்சு வலை வீசுவதற்கு வசதியாகவும், விசைப்படகு என்பது இழுவை வலை வீசுவதற்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலுக்கு ஏற்ற வகையில்தான் இரு படகுகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவே தவிர பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை இரு படகுகளுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல என்பது தான் மீனவர்கள் சொல்லும் உண்மை.
கச்சத்தீவு விழாவுக்கு விசைப்படகுகளில் மட்டும்தான் செல்ல வேண்டும் என்று கூறுவதன் பின்னணியில் வணிக நோக்கம் உள்ளது. நாட்டுப்படகுகளில் ஏழை மீனவர்கள் மிகக்குறைந்த செலவில் கச்சத்தீவுக்கு சென்றுவர முடியும். ஆனால், விசைப்படகுகளில் சென்றுவர வேண்டுமானால் அதிக செலவாகும். இதனால் ஏழை, நடுத்தர மக்களால் கச்சத்தீவுக்கு சென்றுவர முடியாத நிலை ஏற்படும்.
இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ராமேசுவரம் நாட்டுப்படகு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீட்டு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழாவில் ராமேசுவரம் பகுதி பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் சென்று பங்கேற்கவும், அதன் மூலம் அவர்களின் உரிமையை உறுதி செய்யவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.