ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் சோதனை ஓட்டம்

பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் 2 என்ஜின்களை சேர்த்து இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் சோதனை ஓட்டம்
Published on

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. புதிய ரெயில் பால பணிகளை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து நேற்று ரெயில்வே வாரிய உறுப்பினர் அணில்குமார் கண்டேல்வால் ராமேசுவரம் வந்தார். அவர் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் விரிவாக்க பணிகளையும் ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டு பாம்பன் வந்து, ரெயில் பாலம் பணிகளை பார்வையிட்டார். பாலம் கட்டுமானம் தொடங்கியது முதல் தற்போது வரை முடிந்த பணிகளின் படங்கள் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்வையிட்டார்.

இதை தொடர்ந்து படகு மூலம் பாலத்தின் மையப்பகுதிக்கு சென்றார். அங்கு கட்டப்பட்டு வரும் தூக்குப்பாலம் பகுதிக்கு சென்ற அவர் தூக்குப்பாலத்தை திறப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள டவர் மற்றும் அதன் மீது பொருத்தப்பட்டுள்ள இரும்பினால் ஆன வீல் சக்கரத்தையும் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து மண்டபம் பகுதியில் இருந்து, பாலத்தின் நுழைவுப்பகுதிக்கு சென்று பணிகள் நிறைவு பெற்ற பகுதிகளை பார்வையிட்டார். பணி நிறைவு இடத்தில் 2 என்ஜின்களை சேர்த்து இயக்கி சோதனை நடத்தப்பட்டது. ரெயில் என்ஜின்கள் பாலத்தில் வந்தபோது, அதிர்வுகள், உறுதித்தன்மை குறித்து அங்குள்ள கருவியில் பதிவானது. அதையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்காக திருச்சி பொன்மலையில் இருந்து மேற்கண்ட 2 என்ஜின்கள் வரவழைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு என்ஜினும் தலா 110 டன் எடை உள்ள நிலையில் 2 என்ஜின்களையும் சேர்த்து 220 டன் எடையில் பாலத்தில் விடப்பட்டு, 10 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி இந்த சோதனை நடத்தப்பட்டது. மூன்று நாட்களுக்கு இந்த சோதனை நடத்தப்பட உள்ளது. 

பழைய பாலத்தில் 15 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணம் செய்யமுடியும் என்ற நிலை இருந்த நிலையில், புதிய பாலத்தில் 80 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இந்த நிதியாண்டுக்குள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com