

ராமேஸ்வரம்,
உயரமான தூண்களில் நின்று ரயில்வே அதிகாரிகளில் குடும்பத்தினர் செல்பி எடுப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தின் பெருநிலப்பகுதியையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் பாம்பன் பாலத்தின் நடுவில் இந்த செங்குத்து தூக்கு ரெயில் பாலம் அமைந்துள்ளது. இதன் நீளம் 72 மீட்டர் வரை உள்ளது. இந்த பாலத்தின் இரு முனைகளை சுற்றியும் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களை உள்ளே அனுமதிக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரெயில்வே அதிகாரிகள் தங்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை தூக்கு பாலத்திற்கு மேலே செல்ல அனுமதித்துள்ளனர். எந்த ஒரு பாதுகாப்பு கருவிகளும், ஹெல்மேட் எதுவும் அணியாமல் சென்று செல்பி எடுப்பதாகவும் மேலிருந்து கீழே விழுந்தால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளுக்கு ஒரு சட்டம் பொதுமக்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்கக்கூடாது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். மேலும், இது போன்று தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.