

மதுரை,
ராமேசுவரத்தில் இருந்து அயோத்தியை இணைக்கும் வகையில் உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் வரை வாராந்திர ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.
அதன்படி, இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து வருகிற செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளது. ராமேசுவரத்தில் இருந்து நள்ளிரவு 11.55 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு பைசாபாத் ரெயில் நிலையம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் பைசாபாத் ரெயில் நிலையத்தில் இருந்து இந்த ரெயில் (வ.எண்.06794) வருகிற செப்டம்பர் மாதம் 22-ந் தேதியில் இருந்து புதன்கிழமைகளில் இயக்கப்படவுள்ளது. இந்த ரெயில் பைசாபாத் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் வந்தடையும். இந்த ரெயில்கள் மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருப்பாதிரிபுலியூர்(கடலூர்), விழுப்புரம், சென்னை, கூடூர், விஜயவாடா, வாரங்கல், பல்ஹர்சா, நாக்பூர், இட்டார்சி, ஜபல்பூர், சாட்னா, அலகாபாத், ஜான்பூர், ஷாகன்ச், அயோத்தி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ரெயிலில், 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 பார்சல் வேன்களுடன் இணைந்த மாற்றுத்திறனாளி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.