ராமேசுவரம்-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் தற்காலிகமாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பயணிகள் கூட்டம் குறைந்ததால் சில சிறப்பு ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ராமேசுவரம்-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் தற்காலிகமாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on: 

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் கூட்டம் கணிசமான அளவு குறைந்துள்ளது.

இந்த நிலையில் சில சிறப்பு ரெயில்களை தற்காலிகமாக ரத்து செய்ய தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* ராமேசுவரம்-கன்னியாகுமரி (வண்டி எண்: 06165) வாராந்திர சிறப்பு ரெயில் மே மாதம் 1-ந் தேதியில் இருந்தும், கன்னியாகுமரி-ராமேசுவரம் (06166) சிறப்பு ரெயில் மே 2-ந் தேதியில் இருந்தும், எர்ணாகுளம்-பனாஸ்வாடி (06129) சிறப்பு ரெயில் மே 3-ந் தேதியில் இருந்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.

* கொச்சுவேலி-பனாஸ்வாடி (06319), கோவை-கே.எஸ்.ஆர் பெங்களூரு (06154), கே.எஸ்.ஆர் பெங்களூரு-கோவை (06153), சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-மைசூரு (06081), மைசூரு-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (06082), எம்.ஜி.ஆர் சென்டிரல்-கோவை (06029), கோவை-எம்.ஜி.ஆர் சென்டிரல் (06030) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் நாளை ( 29-ந் தேதி) முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (06063) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற மே மாதம் 6, 13, 20, 27-ந் தேதி மற்றும் ஜூன் மாதம் 3, 10-ந் தேதிகளில் எழும்பூர்-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக நாகர்கோவில்-எழும்பூர் (06064) சிறப்பு ரெயில் ஏப்ரல் 30-ந் தேதி, மே 7, 14, 21, 28-ந் தேதி மற்றும் ஜூன் மாதம் 4, 11-ந் தேதிகளில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com