

சென்னை,
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில், திடீர் சோதனையின் போது பறிமுதல் செய்யப்படும் தொகையின் அளவும் சாதனை படைத்து வருகிறது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 55 துறைகள் இயங்கி வருகின்றன. இதில், மக்களுக்கு சேவை அளிக்கும் துறைகள் சுமார் 22 ஆகும். இந்த சேவைத் துறைகளை மக்கள் நாடும்போது, அங்குள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்களில் பெரும்பாலானோர் லஞ்சம் வாங்கிக் கொண்டே கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றனர்.
பொதுமக்களில் ஒருசிலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்வதும், லஞ்சம் தலைவிரித்து ஆடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. லஞ்சப் புகார் என்பது, இன்று.. நேற்றல்ல, ஆண்டாண்டு காலம் நீடித்து வந்தாலும், எல்லா அரசு அலுவலகங்களிலும், "லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்" என்ற விழிப்புணர்வு வாசகம் பெயரளவுக்கு இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
"அவர்கள் கொடுப்பதால்தான் நாங்கள் வாங்குகிறோம்" என்று அரசு ஊழியர்கள் சொல்வதுவும், "அவர்கள் கேட்டதால்தான் நாங்கள் கொடுத்தோம்" என்று பொதுமக்கள் கூறுவதும், "முதலில் கோழி வந்ததா..? அல்லது முட்டை வந்ததா..?" என்ற சிக்கலான கேள்வி போல், புரியாத புதிராகவே உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது த.வெ.க. அரசு பொறுப்பேற்றுள்ளது. முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக்கொண்டுள்ளார். அவர் ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்டதுமே, "லஞ்சத்தை ஒழிப்போம். மக்களுக்கு வெளிப்படையான ஆட்சியை தருவோம்" என்று கூறிவருகிறார்.
இந்தச் சூழ்நிலையில், இப்போது அடிக்கடி அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சார்-பதிவாளர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றை குறிவைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று, கடந்த 4 மாதங்களில் அரசு அலுவலகங்களில் மேற்கொண்ட சோதனையில், எந்த அலுவலகத்திலும் லஞ்சப் பணம் சிக்காமல் இல்லை. எந்த பயமுமின்றி ஜிபே மூலமும் லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
கிராமங்களில், "கள்ளன் பெரிசா..? காப்பான் பெரிசா..?" என்று பழமொழி ஒன்று சொல்வார்கள். இறுதியில் "கள்ளன் தான் பெரிசு" என்று கூறுவார்கள். அதுபோல, லஞ்ச வேட்டை என்னதான் தொடர்ந்தாலும், அதைக்கண்டு யாரும் பயந்ததாக தெரியவில்லை. லஞ்சமும் இம்மி அளவுகூட ஒழிந்த பாடில்லை. அந்த அளவுக்கு சட்டப் பாதுகாப்பும் தவறு செய்தவர்கள் பக்கம் நிற்கிறது.
தமிழகம் முழுவதும் நேற்று 36 மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தியதில், ரூ.13 லட்சத்து 78 ஆயிரத்து 207 லஞ்சப் பணம் ரொக்கமாகவும், ரூ.1 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரத்து 459 லஞ்சப் பணம் ஜிபே மூலம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 666 பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் போலி ரசீது மூலம் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலித்த தொகை ரூ.12,750-ம் அடங்கும். இப்படி அரசுக்கு வரவேண்டிய பணம், அரசு அதிகாரிகள், ஊழியர்களாளேயே களவாடப்படுவது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சத்தை ஒழித்து, முறைகேடுகளை தடுத்தாலே அரசின் கஜானா நிறையத் தொடங்கிவிடும். ஆனால், "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற பாடல் வரிகளைப்போல, லஞ்சம் வாங்குபவர்கள் நிறுத்தாவிட்டால், அதை ஒழிக்க முடியாது என்ற நிலையே இருக்கிறது. இனி இரும்புக்கரம் கொண்டு லஞ்சத்தை ஒழிப்பது அரசின் கையில்தான் இருக்கிறது.