தமிழ்நாட்டில் ரம்ஜான் நோன்பு இன்று தொடக்கம்

ரம்ஜான் மாதத்துக்கான பிறை நேற்று மாலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தெரிந்தது.
தமிழ்நாட்டில் ரம்ஜான் நோன்பு இன்று தொடக்கம்
Published on

சென்னை,

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்று. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரம்ஜான் மாத நோன்பை கடைபிடிக்கும் விதமாக புனித ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதாவது இஸ்லாமிய மாதங்களில் 9-வது மாதமான ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் இந்த நோன்பை கடைபிடிப்பார்கள்.

ரம்ஜான் நோன்பு மற்றும் ரம்ஜான் பண்டிகை ஆகியவை பிறை பார்த்து பின்பற்றப்பட்டு வருகிறது. முதலில் ரம்ஜான் மாதத்துக்கான பிறை தெரிந்தவுடன் ரம்ஜான் நோன்பு தொடங்கும்.

அதன்படி நேற்று முன் தினம் சவுதி அரேபியாவில் ரம்ஜான் நோன்பிற்கான பிறை தெரிந்தது. இதையடுத்து நேற்று தமிழ்நாட்டில் பிறை தெரிய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில் ரம்ஜான் மாதத்துக்கான பிறை நேற்று மாலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தெரிந்தது. இதையடுத்து ரம்ஜான் நோன்பு இன்று முதல் தொடங்குவதாக அரசு தலைமை காஜி என்.பி. உஸ்மான் முஹி யித்தின் அறிவித்தார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அன்பார்ந்த இஸ்லாமிய பெருமக்களே, அஸ்ஸலாமு அலைக்கும். புதன்கிழமை ( 18-02-2026) மாலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புனித ரம்ஜான் மாதத்திற்கான முதல் பிறை தென்பட்டது. இதனை தொடர்ந்து வியாழக்கிழமை (19-02-2022) முதல் புனித ரம்ஜான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசு தலைமை காஜி முப்தி என் பி உஸ்மான் முஹியித்தின் பாகவி மழஹிரி காஸிமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இன்று முதல் பள்ளி வாசல்களில் புனித தராவீஹ் தொழுகைகள் நடைபெறும். இறை அருளும், அமைதியும் சூழும் இந்த ரம்ஜான் மாதத்தில் அனைவரும் நோன்பு நோற்று, நற்செயல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் அருளை பெற வேண்டுகிறோம். அனைவருக்கும் எங்களது கனிவான ரம்ஜான் முபாரக் நல்வாழ்த்துகள்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று முதல் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை தொடங்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com