ரம்ஜான் விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரம்ஜான் விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

திண்டுக்கல்,

மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். அதன்படி தெலுங்கு வருடபிறப்பு, ரம்ஜான் பண்டிகை மற்றும் வார விடுமுறையை கொண்டாட கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். சட்டமன்றத் தேர்தலையொட்டி பறக்கும்படையினர், போலீசார் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

போக்குவரத்து நெரிசலில் இருந்து ஒரு வழியாக கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் இதமான பருவநிலையை அனுபவித்த வாறு வனப்பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். பின்னர் நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரியைச் சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் காரணமாக நகரில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பின இதனால் கிராம பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் சென்று தங்கினார். இதனிடையே நாளையும் விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் பறக்கும்படையினர் சோதனையால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக மலைப்பாதை தரைப்பகுதிகள் மற்றும் பெருமாள்மலை பகுதியிலேயே வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com