

ஆம்பூர்,
ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதியில் இருந்து பல்வேறு செல்போன் எண்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் ஒருவர் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த உரையாளர்களை டெல்லியில் உள்ள மத்திய உளவுத்துறை போலீசார் கண்காணித்து செல்போன் எண்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் பேசிய நபர் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியை அனாஸ் அலி(வயது 22) என்பதும், இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. உடனடியாக இது பற்றி சென்னையில் உள்ள உளவுத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து உளவுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், வேலூர் திருப்பத்தூர், திருச்சி நகரங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உளவுத்துறை போலீசார் என 16-க்கும் மேற்பட்டவர்கள் ஆம்பூருக்கு வந்தனர்.
அவர்கள் நேற்று விடியற்காலை 3 மணி அளவில் நீலிக்கொல்லை பகுதியில் குறிப்பிட்ட வீட்டை சுற்றி வழைத்தனர். தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த போலீசார் அறையில் தூங்கிக் கொண்டிருந்த மாணவனை பிடித்தனர். அவரை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் லேப்டாப்களில் பதிவு செய்யப்பட்ட பதிவுகளை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து வந்த தொழில்நுட்ப குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து பார்த்தனர்.
இது தொடர்பாக மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது ' அனாஸ் அலியின் செல்போன் உரையாடல்கள், சமூக ஊடகங்களில் அவரது பதிவுகள் அனைத்தையும் டெல்லியில் உள்ள மத்திய உளவுத்துறை போலீசார் கண்காணித்து வந்தனர். இதில் அனாஸ் அலி இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து சுமார் 15 மணி நேரம் விசாரணைக்கு பின் அனாஸ் அலியை ஆம்பூர் துணை சூப்பிரண்டு போலீஸ் சரவணன் தலைமையிலான போலீசார் ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பிறகு அனாஸ் அலி மீது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக ஊடகங்களில் செயல்பட்டது, தேச விரோத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது உள்ளிட 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் ஆம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.