ராணிவாய்க்கால் மீட்பு பணிகள் தீவிரம்

தஞ்சை பர்மாபஜாரில் கடைகள் அகற்றப்பட்ட இடத்தில் ராணி வாய்க்கால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொக்லின் எந்திரம் மூலம் கான்கிரீட் உடைக்கப்பட்டு மண் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராணிவாய்க்கால் மீட்பு பணிகள் தீவிரம்
Published on

தஞ்சை பர்மாபஜாரில் கடைகள் அகற்றப்பட்ட இடத்தில் ராணி வாய்க்கால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொக்லின் எந்திரம் மூலம் கான்கிரீட் உடைக்கப்பட்டு மண் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராணி வாய்க்கால்

தஞ்சையில் வ.உ.சி.நகர், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் ராணி வாய்க்கால் மூலம் வடிந்து அழகி குளத்துக்கும், கோட்டை அகழிக்கும் செல்லும் வகையில் நீர்வழிப்பாதை இருந்தது. இந்த நீர்வழிப்பாதை கல்லணைக்கால்வாய் அமைக்கப்பட்ட போது அதன் கீழே ராணி வாய்க்கால் தண்ணீர் செல்வதற்கு இடையூறு இல்லாத வகையில் குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதால் நீரோட்டம் தடைபட்டது.

இதனால் குளம் மற்றும் அகழிக்கு தண்ணீர் செல்லவில்லை. இதையடுத்து இந்த வாய்க்கால் மீட்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டது. அதன்படி இர்வீன்பாலத்தில் இருந்து ஆபிரகாம் பண்டிதர் சாலை வரையில் ராணிவாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அகற்றும் பணி நடைபெற்றது. தற்போது 2-வது கட்டமாக பர்மாபஜார் பகுதியில் உள்ள வாய்க்கால் மீட்கும்பணியை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று தொடங்கினர்.

பொக்லின் எந்திரம்

இந்த பர்மாபஜார் பகுதியில் மட்டும் 89 கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் அறிவுறுத்தினர். அதன்படி கடைக்காரர்கள் கடைகளை தாங்களாகவே அகற்றி வருகின்றனர். அதன்படி அகற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்த இடத்தில் உள்ள ராணி வாய்க்கால் மீட்கும் பணி மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர்கள் மேற்கொண்டனர்.

அதன்படி பொக்லின் எந்திரம் உதவியுடன் வாய்க்கால் மீது போடப்பட்டு இருந்த கான்கிரீட் தளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்ட பின்னர் அந்த கான்கிரீட்டை உடைத்து அதன் உள்ளே இருந்த மண்ணை அகற்றி வாய்க்காலை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர். பர்மாபஜார் பகுதியில் மட்டும் 12 அடி அகலம் உடையதாக இந்த வாய்க்கால் இருந்தது. வாய்க்காலில் இருந்து அகற்றப்பட்ட மண்ணையும், அப்புறப்படுத்தும் பணிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் ராணி வாய்க்கால் மூலம் அழகி குளத்துக்கும், அகழிக்கும் தண்ணீர் கொண்டுவரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com