

சென்னை,
கொரோனா ஊரடங்கின்போது, மராட்டியத்தில் உள்ள தமிழர்களை மீட்கக்கோரி வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, கொரோனோ ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் உணவுக்கே பரிதவிக்கும் நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த பெண் தொழிலாளி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி இருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை தரப்படவில்லை.
எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்து தரவேண்டும். உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு விசாரணை குழுவை அமைக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரக்கட்டுப்பாடு எதுவும் இல்லை, உரிய ஊதியமும் வழங்கப்படுவது இல்லை. அவர்களுக்கு பாதுகாப்பும் இல்லை. புனித பூமி என கருதப்படும் இந்திய நாட்டில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை.
ஆன்மிக பூமியாக இருந்து வரும் நமது நாடு பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறும் நாடாக மாறி வருவது துரதிருஷ்டவசமானது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. கண்காணிப்பில் விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.