மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த அபூர்வ வகை பல்லிகள் - திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரக்கூன் மற்றும் அபூர்வ வகை பல்லிகளை திருப்பி அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த அபூர்வ வகை பல்லிகள் - திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை
Published on

சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அந்த உடைமைகளில் இருந்த கூடையில் ஏதோ உயிருள்ள பொருள் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கூடையை திறந்து பாத்தனா. அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதில் தென் ஆப்பிரிக்கா, வட அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள வனப்பகுதியில் வாழும் அபூர்வ வகையை சேர்ந்த 4 சிறிய தேகு பல்லிகள், வடஅமெரிக்கா பகுதிகளில் வசிக்கும் அரிய வகை குள்ளநரி வகையை சேர்ந்த ரக்கூன் குட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி பயணியிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை குட்டிகள் என்பதால் அவற்றை வீட்டில் வளர்க்க எடுத்து வந்ததாக கூறினார். ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து அவற்றுக்கு நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவரிடம் இல்லை.

மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். ஆனால் அவரிடம் எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 4 பல்லிகள், ஒரு ரக்கூன் குட்டியை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுபற்றி சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் சென்னை விமான நிலையம் வந்து பார்த்தபோது இவை அபூர்வ வகையை சேர்ந்தது என்பது உறுதியானது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பல்லிகள், ரக்கூன் ஆகியவற்றை மீண்டும் மலேசிய நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com