ராசிபுரம்: திருச்செந்தூர் சென்று விட்டு திரும்பிய போது லாரி மீது வேன் மோதல்;10 பேர் படுகாயம்

போலீசார் நடத்திய விசாரணையில், சுற்றுலா வேனிற்கு முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
லாரி மீது வேன் மோதல்
Published on

ராசிபுரம்,

திருச்செந்தூர் சென்று விட்டு திரும்பிய போது ராசிபுரம் அருகே முன் னால் சென்ற லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதால் 10 பேர் காயமடைந்தனர்.

திருச்செந்தூர் கோவில்

சேலம் மாவட்டம் நாட்டாமங்கலத்தை சேர்ந்த தனசேகர் (வயது 45) மற்றும் அவரது குடும்பத்தினர் 12 பேர், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வேனில் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை மின்னம்பள்ளியை சேர்ந்த டிரைவர் அரவிந்த் (29) ஓட்டி வந்துள்ளார்.

கோர விபத்து

நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில், நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரி திடீரென பிரேக் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

10 பேர் காயம்

வேனில் பயணித்த நாட்டாமங்கலத்தை சேர்ந்த தனசேகர் (45), சந்திரலேகா (32), சரஸ்வதி (34), சாமுண்டீஸ்வரி (32), கரண் (26), விஷ்வா (20), செல்வம் (41), கீர்த்திவாசன் (36) உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

வேன் விபத்து

தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு, விபத்தில் சிக்கிய வாகனத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சுற்றுலா வேனிற்கு முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

வழக்குப்பதிவு

விபத்திற்கு காரணமாக கூறப்படும் லாரி நிற்காமல் சென்றுவிட்டதால், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு லாரியை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com