

சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய வளாகத்தில் பொதுப்பணித்துறை திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துதல் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். இத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தை தொடங்கிவைத்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
சமூகத்துக்கு தேவையானவற்றை சேவையாக செய்வதுதான் பொதுப்பணித்துறையின் கடமையாகும். அந்தவகையில், சென்னை கிண்டியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி, மதுரையில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலகம், கோவில்பட்டியில் கி.ராஜநாராயணனுக்கு ரூ.1.5 கோடியில் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் ஆகிய திட்டங்களுக்கான மதிப்பீடுகள், வரைபடம் ஆகியவற்றை விரைவாக இறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டுமானப்பணிகள் நல்ல தரத்துடன், உறுதியுடன் இருக்க வேண்டும். கட்டுமானப் பொருட்களுக்கு உரிய அனைத்து தரப்பரிசோதனை அறிக்கைகளும் கட்டாயமாக பணி நடைபெறும் இடங்களில் வைக்கப்பட வேண்டும். அதேபோல், தமிழகத்தில் 11 இடங்களில் கட்டப்படும் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் நடப்பாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கு வசதியாக இவ்வாண்டு இறுதிக்குள் கட்டிடப்பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.
கூட்டத்தில் சிறப்புச்செயலாளர் கு.அசோகன், முதன்மை தலைமைப் பொறியாளர் ரா.விஸ்வநாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.