

சென்னை
ரேஷன் அரிசியை ஆட்டுக்கும், கோழிக்கும்தான் மக்கள் பயன்படுத்துகின்றனர் என்ற அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சால் சர்ச்சை எழுந்தது.
தமிழக சட்டசபையில் காலை 9.30 மணிக்கு இன்றைய அலுவல்கள் தொடங்கின. கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை.
இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக அவையில் பேசினர்.
இன்றைய நிகழ்வில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி அது தொடர்பான விவாதத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார்.
இதனை அடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசும்போது, எங்களுடைய 5 ஆண்டுகளில் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாப்பாக குடோன்களில் வைத்தோம். நெல்லை பாதுகாத்தோம். நெல்லை நனையாமல், முளைக்க விடாமல், வெள்ளை நிறத்தில் அரிசி கிடைக்க வழி செய்தோம் என்றார்.
இதுபற்றி அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ரேஷன் கடை அரிசியை ஆட்டுக்கும், கோழிக்கும்தான் மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை என்றார். இதற்கு தி.மு.க. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனை தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, நீங்கள் கூறினீர்கள். அதனால், கூறினேன். தமிழகத்தில் சன்ன ரக நெல் உற்பத்தி குறைவு. அண்டை மாநிலங்களில் இருந்து அவற்றை நாம் வாங்குகிறோம். தமிழகத்தில் சன்ன ரக நெல்லை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காக, அதற்கான கூலியை முதல்-அமைச்சர் உயர்த்தி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ரக நெல் உற்பத்தி குறைவு. அதனை அதிகரிக்க முதல்-அமைச்சர் கூறியுள்ளார் என்றார். ரேஷன் கடை அரிசியை சிலர் பயன்படுத்துவதில்லை என்பதே உண்மை என கூறி முடித்து கொண்டார்.