

தஞ்சை,
கும்பகோணம் தாலுகாவில் உள்ள ரேசன்கடைகளில் பாயிண்ட் ஆப் சேல்ஸ் கருவி (விற்பனை முனைய எந்திரம்) மூலமாக பொதுமக்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் 10 நாட்களுக்கு மேலாக ரேஷன்கடைகளில் பாயிண்ட் ஆப் சேல்ஸ் கருவி சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளதால் காலையில் முதல் மாலை வரை பொது மக்களுக்கு ரேஷன் பொருட்களை வினியோகிக்க முடியவில்லை.
மேலும் ரேஷன்கடைக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கும், ரேஷன்கடை பணியாளர்களுக்கும் சர்வர் பிரச்சினையால் வாக்குவாதங்கள் ஏற்படுகிறது. இதனை கண்டித்தும், சர்வர் கோளாறை சரி செய்யக்கோரியும் கும்பகோணம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க கும்பகோணம் வட்டத்தலைவர் கலைவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
ரேஷன்கடைகளில் சர்வர் பிரச்சினையை நிரந்தரமாக போக்க மாவட்ட வழங்கல், வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் கும்பகோணம் வட்ட துணைத்தலைவர் ஆசைத்தம்பி, வட்ட துணை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாரிமுத்து, காமராஜ், ஆப்ரஹாம்லிங்கம், பாபு உள்ளிட்ட தமிழ் நாடு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் கேசவன் நன்றி கூறினார்.