ரேஷன் கடைகளில் புழுங்கல் அரிசி வினியோகம் இல்லை பொதுமக்கள் ஏமாற்றம்

ரேஷன் கடைகளில் புழுங்கல் அரிசி வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் புழுங்கல் அரிசி வினியோகம் இல்லை பொதுமக்கள் ஏமாற்றம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 35,169 நியாயவிலை (ரேஷன்) கடைகள் உள்ளன. இதில், 25,589 முழு நேரக் கடைகளும், 9,580 பகுதி நேரக் கடைகளும் அடங்கும். இந்த நியாயவிலை கடைகளில் 1 கோடியே 96 லட்சத்து 16 ஆயிரத்து 93 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

இவர்களுக்கு பொது வினியோக திட்டத்தின்கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரையும், சிறப்பு பொது வினியோக திட்டத்தின்கீழ் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எந்த வித முன் அறிவிப்பும் இன்றி உளுந்தம் பருப்பு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது.

புழுங்கல் அரிசி இல்லை

இந்த நிலையில், தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் புழுங்கல் அரிசியின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் மாதந்தோறும் விலையில்லாமல் 20 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்று அரசின் உத்தரவு உள்ளது. ஆனால், 10 கிலோ அரிசி மட்டுமே ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படுகிறது.

இந்தநிலைமை, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேலும் மோசமடைந்துவிட்டது. கடந்த 2 மாதங்களாக பெரும்பாலான ரேஷன் கடைகளில், புழுங்கல் அரிசி மாதத்தின் முதல் 2 நாட்களில் வருபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதன் பிறகு வருபவர்களுக்கு அரிசி இல்லை என்று ஊழியர்கள் கைவிரித்து விடுகின்றனர். சில ரேஷன் கடைகளில் புழுங்கல் அரிசி இல்லை, பச்சரிசி வேண்டுமானால் வாங்கிச் செல்லுங்கள் என்றும் பொதுமக்களிடம் கூறுகின்றனர்.

பற்றாக்குறை ஏன்?

இதனால், அரசு வழங்கும் விலையில்லா அரிசியை நம்பியிருக்கும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடைகளில் ஒரு கிலோ புழுங்கல் அரிசியை ரூ.35 முதல் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புழுங்கல் அரிசி பற்றாக்குறை குறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு மாதமும் 25-ந் தேதியே அடுத்த மாதத்திற்கு அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் போன்றவை எவ்வளவு தேவை என்பதை கணக்கிட்டு கேட்போம். துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை எல்லாம் நாங்கள் கேட்பதில் இருந்து 99 சதவீதம் அளவுக்கு வந்துவிடுகிறது. ஆனால், அரிசி மட்டும் 55 சதவீதம் முதல் 60 சதவீதம் அளவுக்குத்தான் வருகிறது. அதுவும், புழுங்கல் அரிசியும், பச்சரிசியும் சரிபாதி அளவுக்கே வழங்கப்படுகிறது. இதனால், புழுங்கல் அரிசி கேட்டு வருபவர்களுக்கு எங்களால் வழங்க முடியவில்லை. நாங்கள் கேட்கும் அளவுக்கு அரிசி ஒதுக்கப்பட்டால் தான் முழுமையாக வழங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com