'ராமர் மீது ராவணனுக்கு வேண்டுமானால் கோபம் இருக்கலாம் காங்கிரசுக்கு இல்லை' - கே.எஸ்.அழகிரி

இந்தியாவில் மகாத்மா காந்தியை போல ராமரை புகழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டபோது, அவரை பின் தொடர்ந்து வந்த வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதை கண்டித்தும், ஸ்ரீ சங்கர்தேவ் சத்ரா கோவிலில் ராகுல்காந்தி வழிபட மறுத்ததை கண்டித்தும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, "ராமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இல்லை. இந்தியாவில் மகாத்மா காந்தியை போல ராமரை புகழ்ந்தவர்கள் யாரும் இல்லை. காங்கிரஸ் எல்லா மதங்களுக்கும் அவர்களது உரிமையை தருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பா.ஜனதாவினருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவிலில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு நடக்கிறதா ? அல்லது பா.ஜனதா மாநாடு நடக்கிறதா?

பிரதமர் மோடியால் உள்துறை மந்திரியின் பணியை செய்ய முடியாது. உள்துறை மந்திரியின் பணியை எதிர்க்கட்சித் தலைவரால் செய்ய முடியாது. அதேபோன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு வைணவர்களோ, ஆச்சாரியர்களோ, சாமியார்களோ தான் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். அதைவிடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பிரதமர் ஏன் விரதம் இருக்கிறார்? அவர் ஏன் தரையில் படுத்து உறங்குகிறார்? 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராமர் பெயரால் வாக்கு சேகரிக்க திட்டமிடுகின்றனர்.

ராமர் மீது ராவணனுக்கு வேண்டுமானால் கோபம் இருக்கலாம் காங்கிரஸ் கட்சிக்கு கோபம் இல்லை. ஆனால், பொய் பிரசாரம் செய்கிறார்கள். மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தாதீர்கள்" என்று அவர் பேசினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com