ஆர்.சி.பி. வெற்றிப்பேரணி உயிரிழப்பு... உரிய விசாரணை நடைபெற வேண்டும் - ஜி.கே.வாசன்

ஆர்.சி.பி. வெற்றிப்பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஒரு வெற்றிப்பேரணியில் சுமார் 11 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மேலும், பலர் மயக்கம் அடைந்தும், சுமார் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருப்பதும் வேதனை அளிக்கிறது.

2025 ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி, கோப்பையை வென்றது.18 வருட ஐ.பி.எல் வரலாற்றில், முதல்முறையாக ஆர்.சி.பி அணி கோப்பையை வென்றதால், நாடு முழுவதும் ஆர்.சி.பி ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி அணி வெற்றி பெற்றதை அடுத்து சின்னசாமி ஸ்டேடியத்தைச் சுற்றி கூட்டம் அலைமோதியது. விதான் வளாகத்தில் ஆர்சிபி அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ள நிலையில், வீரர்களை வரவேற்க ரசிகர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புக்கும், பலர் காயமடைந்திருப்பதற்கும் காரணம் கர்நாடக அரசு முறையாக திட்டமிடாததும், காவல் துறையின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுமே.

குறிப்பாக கூட்டத்தை, ரசிகர்களை, பொது மக்களை பாதுகாக்க சரியான முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டும். அரசின் அலட்சியப்போக்கால் உயிரிழப்புகள் ஏற்பட்டு, காயமடைந்து, மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் நாட்டு மக்கள் மத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவித்தொகை வழங்கி உயர்தர சிகிச்சை அளித்து விரைவில் குணமடையவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com