

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி விஸ்வா மீட்டிங் ஹாலில், கடந்த மே 15-ம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா வரும் மே 26-ம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், திருக்குறள் எழுதும் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இதில் அதிக அளவில் நூல்களை வாங்கிச் செல்லும் புத்தக பிரியர்களை பாராட்டி, அவர்களுக்கு ‘வாசிப்பு செம்மல்’ மற்றும் ‘வாசிப்பு சிகரம்’ ஆகிய உயரிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக விஸ்வா அரங்கில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்கு, ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார். சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருதாளர், பிரபல எழுத்தாளர் உதயசங்கர், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க தலைவர் ரவிவர்மா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இந்த விழாவில் கோவில்பட்டி நகராட்சி மன்ற தலைவர் (சேர்மன்) ஆர்.எஸ்.ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புத்தக அரங்குகளை பார்வையிட்டார். தொடர்ந்து, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களையும், கண்காட்சியில் அதிக நூல்களை வாங்கிய வாசகர்களுக்கு 'வாசிப்பு செம்மல்' சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜ்குமார், பழனிகுமார், முத்துமுருகன், நடராஜன், கண்ணன், மாரியப்பன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க (தமுஎகச) நிர்வாகிகள் மணிமொழிநங்கை, பிரபு, கண்ணகி, சுரேஷ்குமார், தினகரன் உட்பட புத்தக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகி ராஜபாண்டி நன்றி கூறினார்.