பொதுஅறிவு புத்தகங்களை படித்தால் போட்டித்தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம்

பொதுஅறிவு புத்தகங்களை படிப்பதன் மூலம் போட்டித்தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும் என்று விழுப்புரத்தில் நடந்த புத்தக திருவிழா தொடக்கம் விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
பொதுஅறிவு புத்தகங்களை படித்தால் போட்டித்தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் புத்தக திருவிழா விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று தொடங்கியது. இத்திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த புத்தக திருவிழாவின் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மணிக்கண்ணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து புத்தக அரங்குகளை பார்வையிட்டார். தொடர்ந்து, துரை.ரவிக்குமார் எம்.பி. எழுதிய புத்தகங்களை அமைச்சர் க.பொன்முடி வெளியிட அதனை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக்கொண்டார்.

விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

பொதுஅறிவு புத்தகம்

மாணவர்கள், பாடப்புத்தகத்தை படிப்பதோடு மட்டுமல்லாமல் பொது அறிவினை வளர்க்கும் புத்தகங்களையும் படிக்க வேண்டும். பல்வேறு வரலாற்று எழுத்தாளர்களின் புத்தகங்களை நாம் படிப்பதன் மூலம் அவர்கள் கடந்து வந்த பாதை, எதிர்கொண்ட சவால்கள், அறிவாற்றல் மிக்க செயல்பாடுகள் போன்றவை குறித்து நாம் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் நம் வாழ்வில் ஏற்படுகின்ற இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய திறமைகளும் நம்மில் வளரும். பொதுஅறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பதன் மூலம் போட்டித்தேர்வுகளுக்கும் நாம் தயாராகி அத்தேர்வில் எளிதில் வெற்றி பெறவும் முடியும்.

மாணவர்கள் திறனை வளர்த்துக்கொள்வதற்கான பன்னாட்டு கல்வி முறையோடு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், படிக்கும்போதே அரசு போட்டித்தேர்வு எழுதுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காகத்தான் நீங்கள் தேடிச்சென்றாலும் கிடைத்திடாத பல அரிய தகவல்கள் அடங்கிய அறிவுத்திறனை வளர்க்கும் புத்தகங்களை தங்கள் பகுதிகளுக்கே கொண்டு வரும் நோக்கத்தில் புத்தகத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நாளைய வரலாறு

முன்னதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-

புத்தகத்தில் உள்ள கருத்துகள் காலத்தால் அழிக்க முடியாதது, ஒரு புத்தகத்தில் இடம்பெறும் அரிய தகவல்களை இன்றைய தலைமுறையினர் மட்டுமல்லாமல் வருகின்ற தலைமுறையினரும் அறிந்துகொள்ள முடியும். ஆகவே புத்தகத்தில் இடம்பெறும் அனைத்து தகவல்களும் இன்றைய செய்தி நாளைய வரலாறாகும்.மாணவர்கள் பள்ளி- கல்லூரி புத்தகத்தை படிப்பதோடு மட்டுமல்லாமல் பொது அறிவு மற்றும் நற்கருத்துகளை வளர்த்திடும் புத்தகங்களையும் படிக்க வேண்டும். இந்த புத்தகத்திருவிழாவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளதால் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ற புத்தகத்தை தேர்வு செய்து படித்து தங்கள் அறிவாற்றலையும், பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com