அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு தயார் - டி.டி.வி.தினகரன்

தி.மு.க.வை எதிர்ப்பதற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க அ.ம.மு.க. தயாராக இருக்கிறது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்து உள்ளார்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு தயார் - டி.டி.வி.தினகரன்
Published on

ஆர்ப்பாட்டம்

மின்சார கட்டண உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுதல், அமைச்சர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் கிருஷ்ணா ராதா கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் வேதாச்சலம், எல்.ராஜேந்திரன், சி.பி.ராமஜெயம், ஏ.ஆர்.பழனி, முகமது சித்திக் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தூக்கம் வராமல் தவிப்பு

ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

தமிழை பயன்படுத்தி ஏமாற்றுவதில் வல்லவர்கள் தி.மு.க.வினர். இப்போது, புதிதாக மதத்தை கையில் எடுத்து உள்ளனர். 2011 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகாலமாக ஆட்சிக்கு வரமுடியாத தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டு கால முறைகேடான ஆட்சியால்தான் மக்கள் வாக்களித்து உள்ளனர். முதல்-அமைச்சர் பதவியை அடைவதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் இப்போது தூக்கம் வராமல் தவிப்பதாக கூறுகிறார்.

ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் அமைச்சர்களுக்குதான் தூக்கம் வராது. யாராவது முறைகேட்டில் ஈடுபட்டால் உடனடியாக தூக்கி எறியப்படுவார்கள். ஆனால், அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை யாரையும் கட்டுப்படுத்த முடியாமல், தூக்கம் வராமல் இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுவதை பார்த்து மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்.

கூட்டணிக்கு தயார்

அமைச்சர்களை பதவியில் இருந்து தூக்கி எறிந்தால், ஷிண்டேக்கள் முளைத்துவிடுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார்.

தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் நிதானம் இழந்து உள்ளனர். முதல்-அமைச்சர் பயந்து போய் உள்ளார். எனவே, மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் கூறும்போது, ''அ.தி.மு.க.வுடன் இனிமேல் ஒன்றாக இணைவது என்பது எங்களுக்கும் நல்லது அல்ல. அவர்களுக்கும் நல்லது அல்ல. தி.மு.க. என்கிற தீய சக்தியை எதிர்ப்பதற்காக, அவர்களுடன் கூட்டணிக்கு நாங்கள் (அ.ம.மு.க.) தயாராக இருக்கிறோம்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com