அண்ணாமலையை சந்தித்தது ஏன்? - டிடிவி தினகரன் விளக்கம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
கூட்டணி, பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தேர்தலில் அதிமுக , பாஜக கூட்டணி அமைத்துள்ளன. அதேவேளை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கடந்த செப்டம்பர் மாதம் விலகியது. இதனிடையே, டிடிவி தினகரன் நேற்று கோவையில் உள்ள அண்ணாமலை வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் ஒருமணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து அண்ணாமலை நேற்று இரவே டெல்லி புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், டிடிவி தினகரன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அண்ணாமலையை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன் கூறுகையில்,
கூட்டணி குறித்து முடிவு செய்ய இன்னும் காலம் உள்ளது. அமமுகவை தவிர்த்துவிட்டு எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது. அமமுக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிபெறும் , ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்கும். கூட்டணி குறித்து பொறுத்திருந்து முடிவு எடுப்போம். அண்ணாமலை எனது நெருங்கிய நண்பர். நேற்றைய சந்திப்பு நட்பு ரீதியிலானது. அந்த சந்திப்பில் அரசியல் இல்லை. விலைபோகாத தொண்டர்கள் என்னுடன் பயணிக்கின்றனர்.
என்றார்.






