சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்க அரசுக்கு பரிந்துரை - ஐகோர்ட்டில் சிறைத்துறை விளக்கம்

சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் சிறைத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்க அரசுக்கு பரிந்துரை - ஐகோர்ட்டில் சிறைத்துறை விளக்கம்
Published on

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள், ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் பிரபாவதி ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:-

தண்டனை கைதிகளை தற்காலிகமாக வெளியே விட நாட்டில் பரோல், பர்லோ, லீவு (விடுப்பு) என்ற 3 வகையான சட்டம் உள்ளது. 14 ஆண்டுகள் தண்டனை முடித்தவர்களுக்கு ஒரு மாதம் பர்லோ வழங்கப்படும். இந்த ஒரு மாதம் அவர்கள் வெளியில் இருந்தாலும் அது தண்டனை காலத்தில் இருந்து கழிக்கப்படும். இந்த சட்டம் மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ளது.

பரோலில் வெளியில் வரும் கைதிகளின் தண்டனை காலத்தை கழிக்கவும் செய்யலாம், கழிக்காமலும் இருக்கலாம். ஆனால், இந்த 2 முறையும் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின் கீழ் விடுப்பு வழங்கும் முறை தான் அமலில் உள்ளது. இந்த முறையில் வெளியில் செல்லும் கைதிகளின் தண்டனை கழிக்கப்பட மாட்டாது. இந்த சட்டத்தின்படி ஒரு முறை விடுப்பில் வெளியில் வரும் கைதிக்கு 2 ஆண்டுகளுக்கு பின்னரே மீண்டும் விடுப்பு வழங்க முடியும். பேரறிவாளன், 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி முதல் கடந்த ஜனவரி 12-ந் தேதி வரை விடுப்பில் வெளியில் வந்துள்ளார். அதனால், அவருக்கு மீண்டும் விடுப்பு வழங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் பரோல் என்ற முறையே கிடையாதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு குற்றவியல் வக்கீல், விடுப்பு வழங்கும் முறையை தவிர வேறு எதுவும் இல்லை என்றார்.

மேலும் அவர், பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்க மறுத்து, அற்புதம்மாள் மனுவை நிராகரித்து கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும், தமிழக அரசின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்க முடியும். எனவே, விடுப்பில் செல்ல பேரறிவாளனுக்கு விலக்கு அளித்து உத்தரவிட தமிழக அரசுக்கு சிறைத்துறை பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவாக முடிவு எடுக்கும் என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com